அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் விவாதமானது. அப்போது பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை,“திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை” எனச் சபதமேற்று ப்ரஸ் மீட் நடந்தபோதே தான் அணிந்திருந்த ஷூவையும் கழற்றினார். அதன் பிறகு பா.ஜ.க-வின் தலைவர் பொறுப்பிலிருந்து விடைபெற்ற அண்ணாமலை, புதியதாக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மீண்டும் செருப்பணிந்து கொண்டார்.
இதே போன்ற ஒரு சபதத்துடன் கடந்த 14 ஆண்டுகளாக செருப்பணியாமல் இருந்த பா.ஜ.க தொண்டர் குறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. பிரதமர் மோடியின் தீவிர ரசிகரான ராம்பால் காஷ்யப், ஹரியானாவின் கைதல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஒரு தலைவராக நாட்டின் தலைவிதியை நரேந்திர மோடியால் மாற்ற முடியும் என்று ராம்பால் காஷ்யப் உறுதியாக நம்பினார்.
கண்டித்த மோடி
அதனால், கடந்த 2011-ம் ஆண்டு, ‘மோடி இந்தியாவின் பிரதமரானப் பிறகு, அவரை சந்திப்பேன். அப்போதுதான் காலணிகளை அணிவேன். அதுவரை காலணிகளை அணிய மாட்டேன்” என்று சபாதமேற்றிருந்தார்.
அதன்படி இத்தனை வருடங்களாக ராம்பால் காஷ்யப் வெறுங்காலுடனே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹரியானவின் யமுனா நகரில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு பிரதமர் மோடி ராம்பால் காஷ்யப்பை சந்தித்து அவருக்கு புதிய ஷூவை வழங்கி `இனி இதுபோல செய்யக் கூடாது’ எனக் கண்டித்திருக்கிறார்.

அதன் பிறகு தன் எக்ஸ் பக்கத்தில்,“ராம்பால் ஜி போன்றவர்களால் நான் பணிவுடன் இருக்கிறேன். அவர்களின் பாசத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற சபதங்களை எடுக்கும் அனைவரும் தயவுசெய்து சமூக, தேசக் கட்டுமானத்துடன் தொடர்புடைய ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன் – உங்கள் அன்பை நான் மதிக்கிறேன்…! ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.