கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்குமிடையே மோதல் இருந்து வந்தது. பா.ம.க-வின் சிறப்பு பொதுக் குழுவில் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதன் பின்னர் இருவரும் சமாதானமடைந்துவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது தமிழ்நாட்டில் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து, தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், பா.ம.க தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை டிஸ்மிஸ் செய்திருந்தார் டாக்டர் ராமதாஸ்.
ஆனால் நான்தான் பா.ம.க-வின் தலைவன் என அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.
பாட்டாளி மக்கள் கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது.

எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன். எனது பணிகளுக்கு பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன். நம்முன் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய இரு இலக்குகள் உள்ளன. முதலாவது, வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது.
இரண்டாவது 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த காலங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று நமது வலிமையை நிலை நிறுத்துவது. சித்திரை முழுநிலவு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை என்னிடம் வழங்கிய மருத்துவர் அப்பா அவர்கள், அதற்காக மாநாட்டுக்குழு தலைவராக என்னை நியமித்திருக்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அப்பா அவர்களது வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையில் அது தான் என் தலையாய பணியாகும். மீண்டும் சொல்கிறேன்… அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும் அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
