திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகிலுள்ள வடமாதிமங்கலம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட கீழ்ப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அந்தக் கிராத்தைச் சேர்ந்த மின்பயனீட்டாளர் (நுகர்வோர்) கணேசன் என்பவர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு மின்தடை புகார் பற்றி தெரியப்படுத்தியிருக்கிறார். மின்சார வாரியத்தின் செயலி பக்கத்திலும் புகாரைப் பதிவு செய்திருக்கிறார். அவரின் புகார் சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்குத் தகவல் பகிரப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, மின்வாரிய ஊழியர்களான ராஜா மற்றும் முருகன் ஆகிய இருவரும் இரவு 9 மணியளவில் கீழ்ப்பட்டு கிராமத்துக்குச் சென்றனர். மின்தடையை சரிசெய்யாமல் புகார் தெரிவித்த கணேசனின் வீட்டை தேடிப்போய் மிரட்டல் விடுத்தனர். “காத்து அடிச்சி பியூஸ் போய்ருக்கு. அது இயற்கை தானே. எதுக்கு போன் பண்ணி கம்ப்ளைண்ட் கொடுக்குற. நாலு மணி நேரம் கரன்ட் இல்லைனாலும், நாற்பது மணி நேரம் ஆனாலும் உனக்கென்ன பிரச்னை. சொல்லு. புகார் பதிவு பண்ணினா பயந்துடுவோமா.
இதுவே கடைசியா இருக்கட்டும். இந்த மாதிரி கரன்ட் இல்லைனு கம்ப்ளைண்ட் பண்ண டி.எஸ்.பி-கிட்ட உன்மேல கம்ப்ளைண்ட் கொடுப்போம். என் மச்சான் தான் டவுன் எஸ்.ஐ. கம்ப்ளைண்ட் கொடுத்துடுவேன்’’ என்று மிரட்டுகின்றனர்.
அதற்கு கணேசன் “நாலு முறை கரன்ட் ஆஃப் ஆச்சி. அதான் சார் பண்ணேன். நீங்க என்மேல கம்ப்ளைண்ட் கொடுங்க சார். அதுக்காக இந்நேரத்துல வந்து மிரட்டுவீங்களா…’’ என்று கேள்வியெழுப்புகிறார்.

அதற்கு மின்வாரிய ஊழியர்கள், “இதையும் யார்கிட்ட வேணாலும் போய் சொல்லு. நாளைக்கு எங்க வரணும்னு சொல்லு. நா வரேன். பாத்துக்.கலாம். வேற மாதிரி ஆகிடும். சொல்லிட்டேன்’’ என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.