விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கலைஞர் கனவு இல்லத்திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.
இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கிவைத்து 127 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லத்திட்ட பணி ஆணையை வழங்கினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கேஎஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், “2001ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி சொந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் 2010-ம் ஆண்டு குடிசை இல்லா தமிழகம் திட்டத்தின் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கலைஞருக்கு பின்பு நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் தான், வீடு இல்லாத ஏழைகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தொடங்கி வைத்து புதிதாக வீடு கட்டுவதற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கி வீடு கட்டிக் கொடுக்கிறார்.
பயனாளிகள் அனைவரும் விரைவில் வீடுகளை கட்டி முடித்து புதுமனை புகு விழாவிற்கு எங்களையும் கண்டிப்பாக அழைக்கவேண்டும். அவ்வாறு நீங்கள் அழைக்கும் போது நாங்கள் கண்டிப்பாக உங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்து மொய் செய்வோம்” என பேசினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
