குற்ற வழக்கை விரைந்து முடித்துத் தருவதோடு, வழக்கில் பிடிபட்ட வாகனத்தையும் விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் பெண் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.
அப்போது நம்மிடம் பேசியவர்கள், “நெல்லை மாவட்டம் பனக்குடியைச் சேர்ந்த செல்வகுமார். இவர் மீது ஆள் கடத்தல் வழக்கு சம்பந்தமாகத் தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக செல்வக்குமார் கடையம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி நிபந்தனை ஜாமின் கையெழுத்துப் போட்டுவந்துள்ளார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக கடையம் காவல்நிலைய காவலர்கள், காவல் ஆய்வாளரைப் பார்க்குமாறு கூறியுள்ளனர்.
அதன்பேரில் கடையம் காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை காவல் நிலையத்தில் சந்தித்து இந்த வழக்கு சம்பந்தமாக செல்வகுமார் நேற்று பேசியுள்ளார்.
அப்போது, ‘வழக்கைச் சீக்கிரம் முடித்துத் தருவதற்கும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தைச் சீக்கிரம் வெளியில் எடுப்பதற்கும் ஏற்பாடு செய்து தருகிறேன். ஆனால் அதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டும்’ என செல்வக்குமாரிடம் கேட்டுள்ளார்.
இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகுமார், இதுகுறித்து உடனடியாக தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், காவல் ஆய்வாளர் மேரிஜெமிதாவைப் பொரி வைத்துப் பிடிக்கத் திட்டமிட்டனர்.
அதன்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் 30 ஆயிரத்தை வழங்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் செல்வக்குமாருக்கு அறிவுறுத்தி அனுப்பினர்.

இந்தநிலையில், கடையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை இன்று சந்தித்த செல்வக்குமார், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கூறியதுபோல ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரூ.30 ஆயிரத்தை ஆய்வாளரிடம் லஞ்சமாகக் கொடுத்தார்.
அந்தப்பணத்தை ஆய்வாளர் மேரிஜெமிதா பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் நிலைய கண்காணிப்பாளர் பால்சுதர் தலைமையிலான போலீஸார் அதிரடியாக உள்ளே நுழைந்து காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதாவை கையும், களவுமாகக் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய ஆய்வாளர், கையும் களவுமாகச் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY