மும்பையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கார் ரோடு பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் நடந்த காமெடி ஷோவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை காமெடி நடிகர் குனால் கம்ரா துரோகி என்று விமர்சித்து மிமிக்ரி பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில் காமெடி ஷோ படப்பிடிப்பு நடந்த ஸ்டூடியோவை சிவசேனாவினர் அடித்து உடைத்தனர். அதற்கு கட்சியின் இளைஞரணித் தலைவர் ரஹூல் கனல் தலைமை தாங்கினார். ரஹூலையும், அவருடன் சேர்ந்து ஸ்டூடியோவை அடித்து உடைத்த 11 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஏக்நாத் ஷிண்டே கட்சியில் தற்போது மாநில இளைஞரணித் தலைவராக இருக்கும் ரஹூல் கனல் ஒரு நேரத்தில் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதோடு சிவசேனாவின் சோசியல் மீடியா பொறுப்பாளராகவும் இருந்தார்.
ஆனால் ஏக்நாத் ஷிண்டே 2022ம் ஆண்டு சிவசேனாவை உடைத்துக்கொண்டு வெளியில் சென்றபோது, 2023ம் ஆண்டு ரஹூல் கனல் திடீரென ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்தார். அவருக்கு இப்போது ஏக்நாத் ஷிண்டே சிவசேனா இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்து கௌரவித்து இருக்கிறார். அதோடு ஷீரடி சாய்பாபா அறங்காவலராகவும், மும்பை மாநகராட்சி கல்வி கமிட்டி உறுப்பினராவும் இருக்கிறார். மேலும் நடிகர் சல்மான் கானை கௌரவிக்கும் விதமாக பைஜான் என்ற பெயரில் ஒரு உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மும்பை ஸ்டூடியோவை தாக்கியது குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ரஹோல் கனல் கூறுகையில், ”இது ஆரம்பம் தான். எங்கள் தலைவர் அல்லது பெரியவர்களுக்கு எதிராக அவதூறாக பேசினால் விட்டு வைக்க மாட்டோம். எப்போது நீங்கள் (குனால்) மும்பைக்கு வந்தாலும் சிவசேனா ஸ்டைலில் பாடம் கற்பிப்போம்” என்று தெரிவித்தார். ஐ லவ் மும்பை ஃபவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஏக்நாத் ஷிண்டேயை துரோகி என்று சொன்னதற்காக குனால் கம்ரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.