புதுச்சேரி பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் தீனதயாளன் லஞ்சப் புகாரில் சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம், புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், “புதுச்சேரி மாநிலத்தின் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. தலைமைப் பொறியாளர் தீனதயாளன் மற்றும் காரைக்கால் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது புதுச்சேரி பொதுப்பணித்துறையில் நிலவும் ஊழலின் உச்சகட்டம். ஏற்கெனவே இந்தத் துறையின் தலைமைப் பொறியாளர்களாக இருந்தவர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு, அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்து காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு தலைமைப் பொறியாளரான சத்தியமூர்த்தி ஊழல், வேலைக்கு ஆட்கள் நியமனம் உள்ளிட்ட முறைகேடுகளில் சிக்கி பண மோசடி வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். தற்போது லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சம், நகைகள் மற்றும் ஆவணங்களுடன் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு அதிகாரிகள் மட்டுமல்ல, முதல்வர் மற்றும் துறை அமைச்சரும் பொறுப்பேற்க வேண்டும். இப்படியான ஊழல்கள் அவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. புதுச்சேரியில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் பொதுப்பணித்துறை பணிகளில் 20% முதல் 30% சதவிகிதம் வரை கமிஷன் தொகை கைமாறியுள்ளது. இதனால், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் தரமற்ற நிலையில் உள்ளன. வில்லியனூர் ஆரியப்பாளையம் மேம்பாலம் திறந்த ஒரு மாதத்திற்குள்ளேயே பழுதடைந்து கிடக்கிறது. ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் மற்றும் குபேர் பஜார் கட்டிடங்கள் திறப்பதில் தாமதம் போன்ற பிரச்னைகள் இதற்கு சான்றாகும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், இந்த கைது நடவடிக்கைகள் புதுச்சேரி பொதுப்பணித்துறையில் நிலவும் ஊழலின் ஒரு சிறு துளிதான். சி.பி.ஐ விசாரணை தீவிரமடையும் போது மேலும் பல ஊழல் பெருச்சாளிகள் வெளிவருவார்கள். எனவே, இந்த ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்த அதிகாரிகள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்துகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
