புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சைப் பெற்று வரும் இதய நோயாளிகளுக்கு, அசிட்ரோம் (Asitrom 2 / NICOUMALONE – CGTROM) என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரை இரத்தம் உறைதலை கட்டுப்படுத்தி, அதன் அடர்த்தியை குறைத்து நீர்மமாக்கி இதயத்திற்குள் அனுப்பும். இந்த மாத்திரையை தினமும் உட்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை மற்றும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த இந்த மாத்திரை, சில மாதங்களாக நோயாளிகளுக்கு சரியாக வழங்கப்படுவதில்லை என்றும், கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று மருத்துவமனை தரப்பில் நோயாளிகளிடம் கூறுவதாகவும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் சிவா, “NICOUMALONE – CGTROM-1 இந்த மாத்திரை இதய நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இந்த மாத்திரையை யாருக்கும் கொடுக்காமல், மருந்தாளுநர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு, ஏழை நோயாளிகளை மருந்து இருப்பு இல்லை எனக்கூறி வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று திருப்பி அனுப்புகின்றனர்.

இந்த மாத்திரையை சாப்பிடவில்லை என்றால் மாரடைப்பு ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் உள்ளது. ஒரு வாரத்திற்கு இந்த மாத்திரையின் விலை ரூ. 600 ஆகும். ஏழை மக்களால் எப்படி சமாளிக்க முடியும் ? உயிர் காக்கும் மருந்தை வெளியில் விற்றுவிட்டு, அப்பாவி ஏழை மக்களை அலைக்கழிக்க வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மேற்கண்ட மருந்து இருதய நோயாளிகளுக்கு தடை இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.