தெலங்கானா சட்டமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மாநிலத்தில் போதுமான சம்பளம் கொடுக்கவும், அகவிலைப்படி கொடுக்கவும், மூலதனத்துக்கும் பணம் இல்லை. ரூ.71,000 கோடி பற்றாக்குறை இருப்பதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி உரையாற்றினார். இந்த நிலையில், தெலுங்கானாவில் மே 7 முதல் 31 வரை நடைபெறும் 72வது உலக அழகி போட்டியை எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.
தெலங்கானாவின் எதிர்க்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி தன் எக்ஸ் பக்கத்தில், “அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க முடியவில்லை. ஆனால், ரூ.200 கோடி செலவில் அழகிப் போட்டி நடத்துவது அவசியமா? பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும்” என வலியுறுத்தியது.
இது தொடர்பாக பி.ஆர்.எஸ் தலைவர் கே.டி.ராமராவ், “ஹைதராபாத்தில் நடந்த ஃபார்முலா-இ பந்தயத்திற்கு ரூ.46 கோடி செலவழித்தது தவறு என்றால், அது தொடர்பாக வழக்குகள் தொடரப்படும் என்றால்… மிஸ் வேர்ல்டு அழகுப் போட்டியை நடத்த ரூ.200 கோடி பொதுப் பணத்தைச் செலவிடுவதுமட்டும் சரியா? இந்த விபரீத தர்க்கத்துக்கு பின்னணி என்ன? ராகுல் காந்தி, தயவுசெய்து விளக்க முடியுமா?

தெலங்கானாவில் அரசு நன்றாக இயங்குகிறது என்பதை எல்லோரும் நம்ப வேண்டும் என்று காங்கிரஸ் அரசு விரும்புகிறது… அது உண்மையாக இருந்தால், முதல்வர் நேற்று ஏன் திடீரென்று எதிர்மறை வளர்ச்சி இருப்பதாகவும்… ரூ.71,000 கோடி பற்றாக்குறை இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார்? தெலங்கானா உயர்கிறதா அல்லது வீழ்ச்சியடைகிறதா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் தற்போது தெலங்கானா மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.