‘இனி நாணயங்களை அச்சிடாதீர்கள்’ – இதோ ட்ரம்பின் அடுத்த அதிரடி வந்துவிட்டது.
அமெரிக்காவில் ‘பென்னி’ என்ற நாணயத்தை இனி அச்சிட வேண்டாம் என்று இப்போது ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். பென்னி என்பது அமெரிக்காவில் மிக பழமையான மற்றும் மிக குறைந்த விலை நாணயம் ஆகும். இதன் மதிப்பு குறைவு என்றாலும் இதை அச்சிட ஆகும் செலவோ மதிப்பை விட மிக அதிகமாக உள்ளது.
கடந்த நிதியாண்டில் 3.2 பில்லியன் பென்னிகளை அச்சிட்டதற்கு, அமெரிக்கா அரசுக்கு கிட்டதட்ட 85.3 மில்லியன் டாலர்கள் இழப்பு. இந்த இழப்புகளை தடுக்கத் தான் ட்ரம்ப் இப்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதுக்குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “ஒரு பென்னியை அச்சிட அமெரிக்காவிற்கு 2 சென்ட்டிற்கு மேலாக செலவாகிறது. அதனால், அமெரிக்கா கருவறை செயலாளரிடம் இனி புதிய பென்னிகளை அச்சிட வேண்டாம் என்று கூறிவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார். சென்ட்டும், பென்னியும் ஒன்று தான். 100 பென்னிகள் அல்லது சென்டுகள் 1 டாலர் ஆகும்.
இதற்கு முன்பு, எந்த இடத்திலும் ட்ரம்ப் இதுக்குறித்து பேசவில்லை…தெரிவிக்கவில்லை. ஆனால், சமீபத்தில், எலான் மஸ்க் கீழே இயங்கும் அரசின் செயல்திறன் துறை இதுக்குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது நாணயங்களை அச்சிடுவதை நிறுத்தும் அறிவிப்பு வந்துள்ளது.
சட்டப்படி, காங்கிரஸின் எந்த அனுமதியும் இல்லாமல், பென்னி அச்சிடுவதை நிறுத்த முடியுமா…இனி அமெரிக்காவில் பென்னிகள் அச்சிடப்படாதா? என்ற பெரிய கேள்விகள் அமெரிக்காவில் தற்போது எழுந்துள்ளது.