திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, சின்னமோட்டூர் கிராமத்தில் அமையவிருக்கும் தார் கலக்கும் ஆலையை எதிர்த்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் ஒரு பகுதியாக, ஜனவரி 26ம் தேதி, பொதுமக்கள் கையில் தேசியக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாகப் பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து வந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், “சின்னமோட்டூர் ஏரியா கவுன்சிலருக்குச் சொந்தமான இடத்தில் தார் கலக்கும் ஆலை ஒன்றை தொடங்க உள்ளார். அப்பகுதி மக்களுக்கு எந்த முன் தகவலும் கொடுக்காமல், வட இந்தியாவிலிருந்து உள்ளே வர கூட முடியாத குறுகிய வழியில், கனரக வாகனங்கள் மூலம் இயந்திரங்களை இறக்கியுள்ளார். ஏற்கெனவே பொதுமக்கள் பல ஊர்களில் உள்ள தார் ஆலைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு இந்த ஆலை அமைந்தால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பறவைகள், விலங்குகள் என அனைவருக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்படும். மேலும், விளை நிலம் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடும். எனவே, இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்தி, தார் கலக்கும் ஆலையைத் தொடங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, “இந்த இடத்தில் தார் கலக்கும் ஆலை அமையக் கூடாது. இவ்விடத்திலிருந்து சிறிது தொலைவில் தனியார் பள்ளிகள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ளன. ஏற்கெனவே மக்களுக்கு புதிய வியாதிகள் வருவது போதாதா… இங்கு ஆலை தொடங்கினால், இன்னும் எவ்வளவு பாதிப்பு ஏற்படும். எங்கள் ஊர் நன்றாக இருந்தால்தான் நாங்கள் நன்றாக இருக்க முடியும். மிகக் குறுகிய வழியில் பெரிய கனரக வாகனங்கள் வந்தால், நாங்கள் எப்படிச் செல்வது? பள்ளி மாணவர்கள் எப்படிப் பாதுகாப்பாகச் செல்வார்கள். விளை நிலங்கள் பாதிக்கப்படும்போது, அடுத்த வேளைச் சோற்றுக்கு நாங்கள் என்ன செய்வது? முதலில், அந்தச் சோற்றை உண்ண, நாங்கள் உயிரோடு இருக்க வேண்டும் இல்லையா.
நாங்களும் எங்கள் ஏரியா கவுன்சிலரிடம் இது குறித்து பல முறை கூறியுள்ளோம். ஆனால், அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுத்தோம்.

சில நாட்கள் கழித்து, உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இது பற்றி எங்கள் காதுக்கு வரவே இல்லை’ என்று அலட்சியமாகக் கூறுகின்றனர். மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் இது தொடர்பாகப் பேசினோம். ஊர் தலைவரிடமும் பேசினோம். ஆனால், எந்தப் பயனும் இல்லை. அனைத்து அதிகாரிகளும் மௌனம் காக்கின்றனர்.
மறுபக்கம், ‘இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது ’ என்று கவுன்சிலர் மிரட்டல் தொனியில் பேசுகிறார். அவர் ஏற்கனவே வேப்பம்பட்டு என்ற ஊரில் இந்த ஆலையைத் தொடங்க முயன்றார். அப்போது அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், இங்கு தொடங்க முயல்கிறார். நாங்கள் ஒரு போதும் இங்கு தார் தொழிற்சாலை அமைக்க அனுமதிக்க மாட்டோம். அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அடுத்த முறை பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.


இந்த விவகாரம் குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலக அதிகாரி தொல்காப்பியனிடம் விசாரித்தபோது, “இந்த இடத்தில் தார் கலக்கும் ஆலை தொடங்க, கவுன்சிலர் எங்களிடம் அனுமதி வாங்கவில்லை. தற்போது, இயந்திரங்களை மட்டும் இறக்கியுள்ளார். ஒரு வேளை அனுமதி கோரி விண்ணப்பித்தால், அது எங்கள் விதிமுறைகளின் கீழ் வந்தால்தான் அனுமதி வழங்கப்படும். அரசின் விதிமுறைகளை மீறினால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.