நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடலின் மீது உருவாக்கப்பட்டது பாம்பன் பாலம். நூற்றாண்டுகளை கடந்து இயங்கிவந்த இந்த ரயில் பாலத்தில் கடல் அரிப்பின் காரணமாக அவ்வப்போது பழுது ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரூ. 550 கோடி செலவில் பாம்பன் கடல் மீது புதிய ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி கட்டப்பட்ட புதிய பாலத்தின் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது பால பணிகளில் குறைபாடு உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அறிக்கை அளித்தார். இதனால் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் புதிய பாலம் பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் பாலத்தில் உள்ள குறைகளை ஆய்வு செய்ய 5 அதிகாரிகள் குழுவை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய பாலத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து விரைவாக ரயில் போக்குவரத்தினை துவங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதையடுத்து கடந்த மாதம் 31-ம் தேதி கன்னியாகுமரி ரயிலில் வந்த பயணிகள் மண்டபம் ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்ட பின் காலியான ரயில் பெட்டிகளுடன் புதிய பாலத்தின் மீது ராமேஸ்வரத்திற்கு சென்றது. இதே போல் சேது எக்ஸ்பிரஸ் ரயிலும் மண்டபத்தில் இருந்து பயணிகள் இன்றி ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டது. இந்த இரு ரயில்களும் பராமரிப்பு பணிகளுக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக ரயில்வே அறிவித்தது.
இதனை தொடர்ந்து புதிய பாலத்தில் இடையே கப்பல்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து வகையிலான தூக்கு பாலத்தினை தூக்கி பார்த்து ஆய்வு செய்யும் வகையில் அன்றைய தினம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென பழைய மற்றும் புதிய தூக்கு பாலங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து அந்த பாதையின் வழியாக இந்திய கடலோரக் கடற்படை கப்பல் மற்றும் இரண்டு பெரிய மீன்பிடி படகுகள் சென்றன. இதன் மூலம் புதிய தூக்கு பாலம் நல்ல முறையில் சுமார் 15 அடி உயரத்திற்கு தூக்கி பார்த்து சோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் பாம்பன் புதிய பாலத்தின் வழியாக ரயில் மற்றும் கப்பலினை இயக்கி மீண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஶ்ரீ வத்சவ் முன்னிலையில் நடந்த இந்த ஆய்வின் போது, மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 22 பெட்டிகளுடன் கூடிய காலி ரயில் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாம்பன் கடலில் அமைந்துள்ள பழைய மற்றும் புதிய செங்குத்து தூக்கு பாலம் ஆகியன ஒரே நேரத்தில் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட பாலங்கள் வழியாக கடலோரக் காவல் படை கப்பல் இயக்கப்பட்டும் ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோட்ட மேலாளர் சரத் ஶ்ரீ வத்சவ், ”பாம்பன் பால பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இந்த புதிய பாலம் திறக்கப்படும் நாள் குறித்த அறிவிப்பினை அமைச்சர் வெளியிடுவார். ஏற்கனவே உள்ள பாலத்தின் இடையே அமைந்துள்ள தூக்கு பாலம் வலு இழந்துவிட்டது. இதனால் இந்த பாலத்தினை என்ன செய்வது என்பது குறித்து ரயில்வே நிகம் நிறுவனத்தினர் முடிவு செய்வார்கள்” என்றார். பாம்பன் பாலத்தில் இரண்டாம் கட்டமாக ரயில்கள் இயக்கப்பட்டு ஆய்வு நடந்துள்ளதால், விரைவில் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை துவங்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.