பா.ஜ.க உள்கட்சி தேர்தல்
பா.ஜ.க உள்கட்சி தேர்தலில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் பதவிக்கு, தற்போதைய மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ், ஒரத்தநாட்டை சேர்ந்த கர்ணன், உஞ்சியவிடுதி துரை, கண்ணுகுடி துரைமுருகன் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டனர். தேர்தல் அதிகாரியாக ராமசேதுபதி நியமிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இதில், இரண்டாவது முறையாக ஜெய்சதீஷ் மாவட்டத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
அப்போது, ஓ பி சி அணியின் மாநில செயலாளர் கதிரவன் உள்ளிட்ட சிலர், மாவட்டத்தலைவர் ஜெய்சதீஷ் தேர்வுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்பு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். `எல்லாத்துக்கும், எல்லாருக்கும் ஒரு விலை உண்டு என்ற ஜெய்சதீஷ்க்கு மீண்டும் மாவட்டத் தலைவர் பதவியை கொடுத்துள்ளீர்கள்’ என கதிரவன் பேசியதால் கூட்டத்தில் சல சலப்பு ஏற்பட்டது. உடனே ஜெய்சதீஷ் ஆதரவாளர்களும் பேசியதால் ஏற்பட்ட சல சலப்பு அடங்க நீண்ட நேரம் ஆனது. மேடையில் இருந்த நிர்வாகிகள் இரு தரப்பையும் அமைதிப்படுத்தினர். எல்.முருகன் இவற்றை கண்டு கொள்ளாதது போல் அமைதியாக இருந்தார்.
`ஜனநாயக முறைப்படி உள்கட்சி தேர்தல்’ -எல்.முருகன்
இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, “பா.ஜ.க 13 கோடி உறுப்பினர்களை கொண்ட மிகபெரிய கட்சி. நமது கட்சி ஜனநாயக முறைப்படி உள்கட்சி தேர்தலை நடத்துகிறது. வேறு எந்த கட்சியிலும் ஜனநாயக ரீதியாக கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்காது. பா.ஜ.க-வில் மக்கள்க்கு சேவை செய்கின்றவர்களுக்கு ஒருநாள் கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் நமது நாட்டை பிரதமர் மோடி மிக வேமாக வளர்ச்சி பாதையில் எடுத்துச்சென்றுள்ளார். ஏழை, எளிய மக்களின் மீது அக்கறைக்கொண்டு செயல்படும் கட்சி பா.ஜ.க தான். இப்படிப்பட்ட கட்சியில் நாம் எல்லாம் ஒரு உறுப்பினராக இருப்பது பெருமை, கெளரவமான விஷயம். வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நமக்கு மிகப்பெரிய இலக்கு என்றார்.

`தி.மு.கவின் போலியான பிம்பம்’
பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பா.ஜ.க-வின் முழு முயற்சியால், டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் மேலுார் பகுதிக்கு சென்று ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இந்த நாடகம் எல்லாம் செல்லாது. தி.மு.க டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் தங்களால் தான் நிறுத்தப்பட்டதாக போலியான பிம்பத்தை மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர். பொதுசிவில் சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் படிபடியாக கொண்டுவரப்படும்.
2026 சட்டசபை தேர்தல்
தி.மு.க., ஏழாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்பது பகல் கனவாக தான் முடியும். கடந்த தேர்தலில் சொற்ப ஓட்டுகளில் தான் வெற்றிப்பெற்றார்கள். தற்போது மக்களின் தலையில் மின்கட்டணம், சொத்துவரி என சுமையாய் கொண்டு வந்துள்ளனர். மக்களின் வருமானத்தை சுரண்டக்கூடிய அரசாக உள்ளது. மக்கள் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில் மிக பெரிய தோல்வியை தி.மு.க., சந்திக்கும்.
ஆளுநர் மீது காழ்புணர்ச்சி
ஆளுநர் மீது தமிழக அரசுக்கு மிகப்பெரிய காழ்புணர்ச்சி இருக்கிறது. அவர் எது கூறினாலும், நாங்கள் கேட்கமாட்டோம் என்ற மனநிலையில் தி.மு.க உள்ளது. தி.மு.க அரசும், அமைச்சர்களும் ஆளுநர் மீது தனிப்பட்ட தாக்குதலையும், வன்மத்தையும் கொண்டு பேசி வருகின்றனர். தமிழக நலனுக்கு இது நல்லதல்ல. ஆளுநர் பல்வேறு நல்ல விஷயங்களை செயல்படுத்த நினைகிறார். ஆனால், அரசு கேட்க விரும்பவில்லை என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs